தமிழகத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் கொலை, தற்கொலை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, சென்னை காவல்துறை புதிய கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் இளம்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இதையடுத்து விடுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதிய உத்தரவின்படி, விடுதிகளில் தங்க வருவோரின் பெயர், முகவரி, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட முழுமையான அடையாள விவரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை காவல்துறை அதிகாரிகள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், இரண்டு நாட்களுக்கு மேல் தங்கும் நபர்கள் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மீது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதி அறைகள் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும் விடுதி உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் விடுதிகள் இனி நேரடி போலீஸ் கண்காணிப்பில் செயல்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறும் விடுதிகளின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் உரிமம் ரத்து வரை நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் விடுதி உரிமையாளர்களுக்கு சில நடைமுறை சிரமங்களை ஏற்படுத்தினாலும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக அவை அவசியம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: “காசுக்காக ரோட்டில் கையேந்தி நின்ற திருநங்கைகள் இப்போது..” முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு..!



