பிரபல பின்னணி பாடகியாக அறியப்படும் ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாகவும், மன மற்றும் நிதி ரீதியாக தன்னை கட்டுப்படுத்த முயன்றதாகவும் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலக வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறிய தகவலின்படி, சினிமாவில் வாய்ப்பு தேடும் காலத்தில் பல பாடல்களுக்கு கோரஸ் பாடியதாகவும், அதே நேரத்தில் வாய்ப்புக்காக தவறான அழைப்புகள் மற்றும் அழுத்தங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ஒரு இசையமைப்பாளருடன் பணியாற்றும் போது, தன்னை தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்த முயன்றதாகவும், குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டத்துக்குள் தன்னை அறிமுகப்படுத்தி நம்பிக்கையை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சம்பளம் வழங்கப்படாமல் பலமுறை தாமதப்படுத்தப்பட்டதாகவும், நிதி சிக்கல்களை காரணம் காட்டி தனது பணத்தை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது சேமிப்பு பணத்தையும், சொத்துகள் தொடர்பான பணத்தையும் பயன்படுத்தியதாகவும், பின்னர் அதை திருப்பி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 7 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டுடியோவில் தன்னை பலவந்தப்படுத்தி தவறாக நடந்துகொண்டதாகவும், அதை சிசிடிவி மூலம் பதிவு செய்து மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல்கள் வெளியில் செல்லக்கூடாது என மிரட்டல் நடந்ததாகவும், அதன் காரணமாக நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு சினிமா சூழலில் இருந்து விலகி, தற்போது ரிஷிகேஷில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், கடந்த சில வருடங்களாக துணி வியாபாரம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தன்னைப்போன்று மற்ற பெண்களுக்கும் இதேபோன்ற அனுபவங்கள் நடந்திருக்கலாம் எனவும், சிலர் தன்னுடன் தொடர்பு கொண்டு அனுபவங்களை பகிர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் தனிப்பட்ட குற்றச்சாட்டைத் தாண்டி பெரிய விவாதமாக மாறியுள்ளது.
அதே நேரத்தில், அவர் மறைமுகமாக சில பிரபல இசையமைப்பாளர்களை குறிப்பிட்டிருந்தாலும், தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் யார் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் ஊகங்கள் மட்டுமே பரவி வருகின்றன.



