திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குப்பதிவு நாளில் தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் திமுகவின் சேகர் பாபு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குச்சாவடிக்கு வெளியே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது தமிழக வெற்றிக்கழக (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளிட்டோர் மீது முன்னாள் திமுக அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 முக்கியப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more: கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞரை கவ்வி சென்ற முதலை..! மாமியாரின் இறுதிச்சடங்கில் சோகம்..



