தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் சுமார் 4.88 கோடி வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், 85.15% வாக்குப்பதிவு பதிவாகியதாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகளில் தவெக 20 இடங்களைத் தாண்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. இது தவெக ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், எக்ஸிட் போல் கணிப்புகள் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றும், தவெக நிச்சயமாக 120 சீட்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இலங்கை, வங்கதேசம், நேபாளம், பஞ்சாப் உள்ளிட்ட நாடுகளில் கருத்துக்கணிப்புகள் தவறாகி உள்ளதாகவும், அதுபோல் தமிழ்நாட்டிலும் மாற்றம் நிகழும் என்றும் அவர் கூறினார். “மக்களின் அலை மிகப்பெரியது. இந்திய வரலாற்றிலேயே இப்படியான அரசியல் புரட்சியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். விஜய்யின் விசில் புரட்சியை மே 4ஆம் தேதி உலகமே காணும்” எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டை விஜய் தலைமையிலான அரசு ஆளும் நிலை உருவாகும் என்றும் கூறினார். இது மக்கள் தீர்மானித்த முடிவாகவே தாங்கள் பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் மீண்டும் போட்டியிட்டுள்ளார். தொடர்ச்சியாக 8 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இம்முறையும் தவெக சார்பில் வெற்றி பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதிமுக வாக்குகள் மட்டுமின்றி, இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளும் அவருக்கு சாதகமாக இருக்கலாம் என அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Read more: நகைப்பிரியர்கள் கவனத்திற்கு..! இன்று தங்கம் விலை உயர்ந்ததா..? சரிந்ததா..? நிலவரம் இதோ..!



