டெல்லியில் உள்ள கிரீன் பார்க் பகுதியில் 30 வயதான நீதித்துறை அதிகாரி ஒருவர் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அமன் குமார் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கர்கர்டூமா நீதிமன்றங்களில் வடகிழக்கு மாவட்டத்தின் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA) செயலாளராக பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தகவலின்படி, அமன் குமார் சர்மா தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரியவந்துள்ளதாகவும், சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பமாக, அவரது குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மனைவி மற்றும் மாமியார் வீட்டினருடன் தொடர்ந்து ஏற்பட்ட தகராறுகள் காரணமாக அமன் குமார் சர்மா மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். அவர் தொடர்ந்து துன்புறுத்தலை எதிர்கொண்டதாகவும், அதுவே இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தற்கொலைக்கு முன் தன் தந்தையிடம் வாழவே பிடிக்கவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு, தனிப்பட்ட மன அழுத்தம், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இதுவரை தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்த அமன் குமார் ஷர்மா, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 19 ம் தேதி டெல்லி நீதித்துறையில் பணிக்கு சேர்ந்தார். இவர் கடந்த 2018 ம் ஆண்டில் புனேவில் உள்ள பிஏ எல்எல்பி படிப்பை முடித்தார். இவர் டெல்லியில் பல முக்கிய வழக்குகளை கையாண்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.



