தேர்வு வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) 2026 தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையால் ரத்து செய்யப்பட்ட சம்பவம், இந்திய கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது மட்டும் அல்லாமல், கடந்த 5 ஆண்டுகளில் பல முக்கியமான போட்டித் தேர்வுகளும் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளன. 2024-ஆம் ஆண்டு நீட்-யுஜி மற்றும் யுஜிசி-நெட் தேர்வுகள், 2023-ஆம் ஆண்டு பீகார் காவலர் தேர்வு மற்றும் எய்ம்ஸ் செவிலியர் அதிகாரி ஆட்சேர்ப்பு தேர்வு, 2021-ஆம் ஆண்டு ஜேஇஇ மெயின் மற்றும் ரீட் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த சம்பவங்களால் லட்சக்கணக்கான மாணவர்கள் மனஅழுத்தத்திற்கும் எதிர்காலம் குறித்த அச்சத்திற்கும் ஆளாகினர். பல மாதங்கள் தயாராகி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு பின்னர், மத்திய அரசு “பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) சட்டம், 2024” என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் மத்திய அரசு நடத்தும் பொதுத் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் திட்டமிட்ட தேர்வு மோசடிகளைத் தடுக்க உருவாக்கப்பட்டது.
இந்த மசோதா முதலில் 2024 பிப்ரவரி 5-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, 2024 ஜூன் 21-ஆம் தேதி இந்தச் சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டத்தின் கீழ், தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் வினாத்தாள் கசிவு அல்லது மோசடியில் ஈடுபட்டால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலாக செயல்பட்டு தேர்வு மோசடியில் ஈடுபட்டால், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன், ரூ.1 கோடிக்கும் அதிகமான அபராதமும் விதிக்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள் காரணமாக, தேர்வு நடத்தும் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இனிமேல் இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளை முழுமையாக தடுக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிகரித்துள்ளது.
Read more: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரப்போகுதா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் முக்கிய தகவல்..!



