தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. மேலும் சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.. தவெகவுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது.
தொடர்ந்து முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கியமான நலத்திட்டங்கள் தொடரும் என்று விஜய் அறிவித்திருந்தார். முந்தைய திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் படித்து, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது.. இந்த சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பணம் வரவு வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதனிடையே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். மேலும் மே மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் 15 ஆம் தேதியான இன்று மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் தான் மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நேற்று அறிவித்த நிலையில் இன்றே ரூ.1000 பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது பெண்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



