இந்திய அஞ்சல் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டு சேவைகளுக்கான நேரடி முகவர்கள் (Direct Agent) மற்றும் கள அலுவலர்கள் (Field Officer) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கீழ் செயல்படும் அஞ்சல் ஆயுள் காப்பீடு (Postal Life Insurance – PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு (Rural Postal Life Insurance – RPLI) திட்டங்களின் வணிக சேவைகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை: நேரடி முகவர்கள் (Direct Agent) மற்றும் கள அலுவலர்கள் (Field Officer) பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, அவர்கள் மேற்கொள்ளும் காப்பீட்டு வணிகத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், இளைஞர்கள் மட்டுமல்லாமல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்களுக்கும் மத்திய அரசு சார்ந்த சேவையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? நேரடி முகவர் (Direct Agent) பணிக்கு வேலை இல்லாதோர், சுயதொழில் செய்பவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், கள அலுவலர் (Field Officer) பணிக்கு ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு: இந்த சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு வருகிற 26.05.2026 மற்றும் 27.05.2026 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரில் அமைந்துள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்: நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ், வயது சான்று, ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, PAN அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் பிரதிகளுடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: 7 நிமிடங்களில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை.. இந்தியாவில் ரோச் அறிமுகப்படுத்திய புதிய மருந்து..!



