மகளிர் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு புதிய நீண்டகால சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தையை கல்வி பெறச் செய்வோம்” திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை சமாளிக்க குடும்பங்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்கால நிதிச் சுமையை குறைத்து, அவர்களுக்கு வலுவான பொருளாதார பாதுகாப்பை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இந்த கணக்கைத் தொடங்கி, வருடாந்திர அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.250. அதிகபட்ச முதலீடு ரூ.1.5 லட்சம். இதன் மூலம் குடும்பத்தின் பொருளாதார திறனைப் பொறுத்து சேமிப்பு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச்சலுகை பெறும் வகையில் உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் வரி சுமையை குறைத்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் நீண்டகால சேமிப்பு திட்டமாகும்.
உதாரணமாக 5 வயது குழந்தைக்காக ஆண்டுக்கு ரூ.1.2 லட்சம் அல்லது மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், 21 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.55.61 லட்சம் வரை கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்யப்பட்ட தொகை: ரூ.17.93 லட்சம். கிடைக்கும் வட்டி தொகை: ரூ.37.68 லட்சம்.
இந்த திட்டத்தின் விதிப்படி, முதலீடு செய்யப்பட்ட தொகை 21 ஆண்டுகள் முடிவில் மட்டுமே பெற முடியும். உதாரணமாக, 5 வயதில் கணக்கு தொடங்கப்பட்டால், அந்த குழந்தைக்கு 26 வயதில் முழு தொகை கிடைக்கும். பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் எதிர்கால தேவைகளை பாதுகாப்பாக நிர்வகிக்க இந்த திட்டம் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பங்களில் சேமிப்பு பழக்கம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் குடலில் இதுதான் நடக்கும்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!



