கங்கா நதியில் படகில் இஃப்தார் விருந்து நடத்தி, அசைவ உணவுக் கழிவுகளை ஆற்றில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு முஸ்லிம் இளைஞர்களுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேசமயம், “கங்கை நதியில் அசைவ உணவுக் கழிவுகளை கொட்டுவது இந்து சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும்” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வாரணாசியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மத நல்லிணக்கத்தை பாதித்தல், பொதுநீரை மாசுபடுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் மே 15ஆம் தேதி வெளியிடப்பட்ட தனித்தனி உத்தரவுகளில், நீதிபதி ராஜீவ் லோச்சன் சுக்லா ஐந்து பேருக்கும், நீதிபதி ஜிதேந்திர குமார் சின்ஹா மற்ற மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கினர். மேலும் ஆறு பேரின் ஜாமீன் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
16 பக்க உத்தரவில் நீதிபதி சுக்லா, “குற்றச்சாட்டுக்குரிய செயல் இந்து மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். சமூகத்திற்கும் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட வேதனைக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், குற்றப்பின்னணி இல்லாதது, ஏற்கனவே காவலில் இருந்த காலம் மற்றும் மன்னிப்பு கோரியிருப்பது போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் முகமது ஆசாத் அலி, முகமது தஹ்சீம், நிஹால் அப்ரிடி, முகமது தௌசீப் அகமது, முகமது அனஸ், முகமது சமீர், முகமது அகமது ராசா மற்றும் முகமது பைசான் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மாவட்டத் தலைவர் ரஜத் ஜெயஸ்வால் அளித்த புகாரின் அடிப்படையில், வாரணாசி காவல்துறை நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Read more: எபோலா பரவல் : உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்த WHO..! இந்தியாவுக்கு ஆபத்தா..?



