முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன.. குறிப்பாக ஏற்கனவே அதிமுக, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் புதிதாக தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போல சமூக வலைதளங்களில் தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் AI மூலம் உருவாக்கப்பட்ட பல போலி செய்திகளை தமிழக அரசு வெளியிட்டதாக கூறியும் பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் உண்மை செய்தி எது பொய் செய்தி எது என்பதை கண்டறிவதிலேயே குழப்பம் நீடிக்கிறது..
இப்படி போலி செய்திகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் தவெக கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி அதை தங்கள் ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர்.. தவெகவினர் இந்த செயல்களுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் – மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.
தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் “யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்” என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.
எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்..” என்று பதிவிட்டுள்ளார்..
Read More : கேரள அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிப்பு: முதல்வர் சதீசன் வசம் நிதித்துறை..! முழு லிஸ்ட்..!



