தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது வெளியான பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் தலைமையிலான அரசு முழுமையான பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸ், இடது சாரிகள். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்தது. இந்த சூழலில், எடப்பாடி கே. பழனிசாமி அணியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக அதிருப்தி அணியினரும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பரவியது. ஆனால் இந்த முயற்சிக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, “அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால் அரசுக்கு வழங்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகும்” என எச்சரிக்கை விடுத்தது.
இதனால் ஒருபுறம் அதிமுக ஆதரவை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும், மறுபுறம் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய சூழல் விஜய் தரப்புக்கு ஏற்பட்டது. இதற்கிடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், சில முன்னாள் அமைச்சர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இறுதியில் அதிமுக தரப்பிலிருந்து யாருக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தற்போது வெளியான அமைச்சரவை பட்டியலில் தூத்துக்குடி ஸ்ரீநாத், அவிநாசி கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி, கடலூர் ராஜ்குமார், ஸ்ரீரங்கம் ரமேஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெரும்பாலானோர் தவெகவைச் சேர்ந்தவர்களாகவும், இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தும் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளனர். அதேநேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணி தெரிவித்திருப்பதால் மீண்டும் அதிமுகவில் இணைந்த பழைய நிலைக்கு திரும்ப முடியாமலும் தவித்து வருகிறது. நட்டாற்றில் தவிக்கும் நிலை சி.வி.சண்முகம் டீமுக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகரகள் கருதுகின்றனர்.
Read more: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும்! உடலில் நிகழும் அற்புதங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?



