உத்தரப் பிரதேசத்தில் சிறார்களை குறிவைத்து செயல்பட்டதாகக் கூறப்படும் பெரிய அளவிலான ஆன்லைன் ஆபாச வலையமைப்பை காவல்துறை முறியடித்துள்ளது. டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பி.டெக் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த விகாஸ் சிங் என்பவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு பி.டெக் முடித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் மூலம் ஆபாச உள்ளடக்கங்களை பரப்பியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மே 17-ஆம் தேதி சைபர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் பல தனிப்படை காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு விகாஸ் சிங் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் மொத்தம் 21 குழுக்கள் மற்றும் சேனல்கள் உருவாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த குழுக்கள் மூலம் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிறார்களும் இந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
மேலும், தனிநபர்களின் தனியுரிமையை மீறும் வகையிலான வீடியோக்களும் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 7,000 பயனர்களைக் கொண்ட பெரிய நெட்வொர்க்கை அவர் உருவாக்கியிருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என நம்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை சோதனையில், 10,000-க்கும் அதிகமான வீடியோக்கள் மற்றும் 40,000 ஆபாச புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அவரது வங்கிக் கணக்குகளில் சுமார் 1.20 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உள்ளடக்கங்களுக்கு சந்தா முறையில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாத சந்தா ரூ.350, மூன்று மாதங்களுக்கு ரூ.450 மற்றும் ஆறு மாதங்களுக்கு ரூ.600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு முதல் இந்த செயல்பாடு நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கங்களையே பெரும்பாலும் பகிர்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் பலர் தொடர்புடையிருக்கலாம் என்பதால் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Read more: கிட்சனில் நாம் தினமும் பயன்படுத்தும் இந்த 3 பொருட்கள் கேன்சரை உண்டாக்குமாம்..! அலட்சியம் வேண்டாம்..



