நாம் தினமும் பயன்படுத்தும் சமையலறை பொருட்களில் சில, தெரியாமலேயே உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் மற்றும் சேதமடைந்த சமையல் உபகரணங்கள் நீண்ட காலத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
காய்கறி வெட்டும் பலகை: பல வீடுகளில் காய்கறிகள் மற்றும் இறைச்சி வெட்டுவதற்கு பிளாஸ்டிக் வெட்டும் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. மலிவான விலை மற்றும் எடை குறைவான தன்மை காரணமாக இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கத்தியால் தொடர்ந்து வெட்டப்படுவதால் அதில் சிறிய கீறல்கள் உருவாகின்றன. அந்த இடங்களில் பாக்டீரியாக்கள் தேங்குவதற்கான வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், வெட்டும் போது பிளாஸ்டிக்கில் இருந்து சிறிய நுண்துகள்கள் உணவில் கலக்கும் அபாயமும் உள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் சென்றால், நீண்ட காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலாக மரத்தால் செய்யப்பட்ட வெட்டும் பலகைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
பிளாஸ்டிக் கரண்டி: சூடான எண்ணெய் அல்லது குழம்புகளில் பிளாஸ்டிக் கரண்டிகளை பயன்படுத்துவதும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. அதிக வெப்பத்தில் தரமற்ற பிளாஸ்டிக் கரண்டிகளில் இருந்து பிஸ்பெனால்-ஏ (BPA) போன்ற இரசாயனங்கள் வெளிப்பட்டு உணவில் கலக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இரசாயனங்கள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மரம், எஃகு அல்லது உயர்தர சிலிக்கான் பொருட்களால் செய்யப்பட்ட கரண்டிகளை பயன்படுத்துவது நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நான் ஸ்டிக் பாத்திரங்கள்: மேலும், நான்-ஸ்டிக் பாத்திரங்களும் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. நான்-ஸ்டிக் மேற்பரப்பில் கீறல்கள் ஏற்பட்டால், அதிலிருந்து வெளிவரும் நுண்துகள்கள் உணவில் கலக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக அதிக வெப்பத்தில் பயன்படுத்தும்போது சில தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் கீறல்கள் ஏற்பட்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். சமையலறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை அடிக்கடி பரிசோதித்து, சேதமடைந்த பொருட்களை மாற்றுவது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உணவில் மட்டும் இல்லை; உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களிலும் உள்ளது என்பதால், சமையலறை உபகரணங்களை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும்! உடலில் நிகழும் அற்புதங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?



