கிழக்கு காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவது உலக சுகாதார அமைப்புகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தற்போது 671 பேருக்கு எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல், 160 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு உலக சுகாதார அமைப்பு (WHO), சுமார் 600 சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்றுகளும் 130-க்கும் மேற்பட்ட மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவித்திருந்தது. இருப்பினும், அனைத்து நோயாளிகளும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாததால், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று WHO எச்சரித்துள்ளது.
அண்டை நாடான உகாண்டாவிலும் எபோலா அச்சம் நிலவி வருகிறது. காங்கோ நாட்டைச் சேர்ந்த இரு நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதாக உகாண்டா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு நடத்தப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
தகவலின்படி, இந்த எபோலா பரவல் காங்கோவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இடுரி மாகாணத்தில் தொடங்கியுள்ளது. இது 1976ஆம் ஆண்டு முதல் காங்கோவில் பதிவாகும் 17வது எபோலா பரவலாகும். தற்போதைய பரவல் “புண்டிபுக்யோ” (Bundibugyo) வகை எபோலா வைரஸால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகை வைரஸுக்கு இதுவரை உறுதியான தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை இல்லை என்பதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக மாறியுள்ளது.
எபோலா என்பது மிகவும் ஆபத்தான தொற்று நோயாகும். பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்கள் மற்றும் நேரடி தொடர்பு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. அதிக காய்ச்சல், உடல் பலவீனம், இரத்தப்போக்கு உள்ளிட்ட தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய இந்த நோய், உயிரிழப்பிற்கும் வழிவகுக்கிறது. 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பெருந்தொற்றில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: நுரையீரலை போல இதயத்தில் ஏன் புற்றுநோய் வருவதில்லை..? – மருத்துவர் விளக்கம்!



