தமிழகத்தில் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஒழுங்கையும் நேர கட்டுப்பாட்டையும் கடுமையாகப் பின்பற்றச் செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
முதல்வர் தினமும் காலை சரியாக 10 மணிக்குத் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து பணிகளைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் நேர்த்தியான பணிச்சூழலை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கல்வித்துறை தற்போது அரசு ஊழியர்களின் வருகை நேரம் மற்றும் அலுவலக ஒழுங்கு தொடர்பாக முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளர்கள் மற்றும் பதிவேடு எழுத்தர்கள் காலை 9.30 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என்றும், அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் காலை 10 மணிக்கு முன்பாக அலுவலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பணிக்கு தாமதமாக வருவது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், விடுப்பு எடுப்பதற்கு முன் அனுமதி அவசியம் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுப்பு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இதனுடன், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பணி நேர விதிமுறைகளும் மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளன. அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4.10 மணி வரை பணியில் இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்குள் வருகை தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்பு அரசு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணிநேரம் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது தாமதமாக வருவது குறித்து அதிக புகார்கள் எழுந்ததால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இனி அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேர கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், விதிமுறைகளை மீறுவோருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read more: “கன்னடம் பிறக்கும் முன்பே காவிரி எங்களுடையது!” டி.கே.சிவக்குமாரை தாக்கி பேசிய சீமான்..! முதல்வர் விஜய்-க்கு டாப் கியர் கோரிக்கை..!



