தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது.. இந்த சூழலில் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து இன்று இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினர்.. இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மீண்டும் இபிஎஸ் உடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது..
இந்த நிலையில். எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் சபநாயகர் ஜே.சி.டி பிரபாகரனிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 44ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 3 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “ மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகிய 3 பேர் இன்று முதல் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர்.. விதிகளுக்கு உட்பட்டு 3 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டது.. எம்.எல்.ஏ பதவி விலகும் போது அதற்கான காரணத்தை கூற வேண்டியது இல்லை.. ராஜினாமா கடிதம் முறையாக இருக்கிறதா..? இல்லை என்பதை பார்க்க வேண்டியது தான் எனது பணி..
அதிமுகவின் சட்டமன்ற தலைவர் குறித்து இரு தரப்பினரும் மனு அளித்துள்ளனர், ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை.. அதிமுகவினரின் மனுக்கள் குறித்து விதிகளின் படி நடவடிக்கை எடுப்பேன்..” என்று தெரிவித்தார்..
Read More : இது தொடக்கம் தான்.. அதிமுகவில் மேலும் பல எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு..? தவெகவின் பிளான் இதுதான்..!



