இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு அவரின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான வைரமுத்து கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வைரமுத்து வெளியிட்ட வீடியோவில் “ பிதாமகனே போய்விட்டாயா..? கிராமத்து ராஜாவே இறந்துவிட்டாயா..? அடைத்து கிடந்த திரையுலக கதவுகளை திறந்தவெளிக்கு திறந்துவிட்டவனே..? ஆகாயத்திற்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே..? உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக என் இனிய தமிழ் மக்கள் என்ற ரத்தின சொற்களுக்கு முத்திரை சேர்த்தவனே..
நீ மாயக்காரன்.. புழுதியில் பொன் செய்தாய்.. சினிமாவின் நிறம் வெள்ளை என்று இருந்ததை கருப்பென்று மாற்றிய கலையாளன் நீ.. இடிந்த சுவர்களும், உடைந்த மனிதர்களும் கிழந்த வாழ்க்கையும் உன் கலையின் கச்சாப் பொருள்கள்.. அல்லி நகரத்து அரசன் நீ.. இனி நான் எப்படி தனியாக தேனிக்கு வருவேன்..
மேற்கு தொடர்ச்சி மலை அருவிகளால் அழுது கொண்டே கேட்குமே.? எங்கே பாரதிராஜா..? கத்தாலங்காட்டு கரிச்சான் கேட்குமே எங்கே பாரதிராஜா..? கருவேலம் மரம் கேட்குமே எங்கே பாரதிராஜா..? என்ன பதில் சொல்வேன்.? எப்படி நான் தனித்திருப்பேன்.. நீ தூரிகை, நான் வண்ணம், நான் தூரிகை, நீ வண்ணம்.. தூரிகை இல்லாமல் வண்ணமும், வண்ணம் இல்லாமல் தூரிகையும் என்னத்திற்கு ஆகும்..?
நீ அரிவாள்.. நான் கைப்பிடி, நான் அரிவள், நீ கைப்பிடி.. அரிவாள் இல்லாத கைப்பிடியும், கைப்பிடியும் இல்லாத அரிவாளும் என்னத்துக்கு ஆகும்..? என்னை அழவிடு.. உடம்பின் உப்பெல்லாம் கண்ணீராய் கரையட்டும்.. நடிகர் திலகம் போல் நானும் புலம்புகிறேன்.. பூங்காத்து திரும்புமா..? என் பாட்டை விரும்புமா..? பாராட்ட, மடியில் வச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கிடைக்குமா..? முதல் மரியாதை செய்தவனே உன் என் இறுதி மரியாதை..” என்று நா தழுதழுக்க உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்..
Read More : 6 முறை தேசிய விருது வென்றவர் பாரதிராஜா..! என்னென்ன படங்களுக்கு தெரியுமா..?



