பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தற்போது மிகப் பெரிய கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி, வேலை என எந்த இடத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், சிறுமிகள் தொடர்பான மர்ம மரணங்களும் சமூகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்குட்பட்ட ஏரி கொல்லை பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவருக்கு 16 வயதான மோவிதா என்ற மகள் உள்ளார். இவர், அருகே உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மோவிதா, மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், மோவிதாவை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது, வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் மோவிதா சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால், மோவிதாவின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். மேலும், மோவிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சடலத்தை இரவோடு இரவாக அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வைத்து எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, விஏஓ காசிநாதன் என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, விஏஓ காசிநாதன் நேற்று காலை அம்பலூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மோவிதாவின் தந்தை கோவிந்தசாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மோவிதாவின் உறவினர்கள் மற்றும் மாணவி படித்த பள்ளி உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: “அப்பா என்ன விட்டுரு” கதறிய மகன்; இரக்கம் இல்லாமல் தந்தை செய்த கொடூரச் செயல்..



