மல்லிகைப் பூ என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. கோடிக்கணக்கில் நகை வாங்கிக் கொடுத்தால் கூட கிடைக்காத மகிழ்ச்சி, ஒரு மல்லிகைப் பூவிலேயே கிடைத்துவிடும் எனக் கூறும் பெண்கள் பலர் உண்டு. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த மல்லிகைப் பூவை தினமும் தலையில் சூட வேண்டும் எனப் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், மல்லிகைப் பூவை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியாது என்பதே ஒரு பொதுவான சிக்கலாக உள்ளது.
வீட்டில் தினமும் மல்லிகைப் பூக்கள் வாங்கி வைத்தாலும், அவை சில நாட்களில் வாடி நிறம் மாறுவது பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினையாகும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய குறிப்புகளை பின்பற்றினால், பூக்களின் புத்துணர்ச்சியை நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும்.
பூக்களை நீண்ட நேரம் பிளாஸ்டிக் கவரில் வைத்திருப்பது ஈரப்பதத்தை அதிகரித்து அவை விரைவில் கெடுவதற்கு காரணமாகும். எனவே, வாங்கியவுடன் அவற்றை கவரிலிருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது. பின்னர், அவற்றை காற்று புகாத சுத்தமான டப்பாவில் சேமிக்கலாம். அதனுள் சிறிதளவு பச்சரிசியை ஒரு மெல்லிய துணியில் கட்டி வைப்பதால், அதிக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு பூக்கள் விரைவில் வாடாமல் இருக்கும். இதை ஃப்ரிட்ஜில் வைப்பது மேலும் சிறந்த பலனை தரும்.
பூக்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் லேசாக ஈரப்படுத்திய பருத்தித் துணியை விரித்து அதன் மேல் பூக்களை வைக்கலாம். இது தேவையான ஈரப்பதத்தை தக்கவைத்து பூக்கள் உலராமல் இருக்க உதவும். அதுமட்டும் இல்லாமல், பூக்களை நியூஸ் பேப்பர் அல்லது வாழையிலையில் மெதுவாக மடித்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இது இயற்கையான காற்றோட்டத்தை வழங்கி பூக்களின் மணத்தையும் புத்துணர்ச்சியையும் பாதுகாக்கும்.
பூக்களை நேரடியாக தண்ணீரில் கழுவி வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக ஈரப்பதம் காரணமாக அவை விரைவில் கெட வாய்ப்பு உள்ளது. தேவையெனில் லேசாக மட்டும் தண்ணீர் தெளிக்கலாம்.
Also Read: உங்க டாய்லெட் எவ்வளவு அழுக்கா இருந்தாலும் பரவாயில்ல! இந்த ஒரு கல் போதும்! புதுசு மாதிரி ஜொலிக்கும்!



