பணம் சம்பாதிப்பதில் திறமையாக இருக்கும் நாம், ஆரோக்கியத்தை பேணுவதில் அதே அளவு கவனம் செலுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. வாழ்க்கையில் பணத்தைத் தேடி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், உடல் நலத்திற்கு தேவையான அக்கறை குறைந்து வருகிறது. இதன் விளைவாக, இன்று பல புதிய வகை நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் மற்றும் தவறான உணவு பழக்கங்கள் ஆகியவை இதற்குக் காரணமாகின்றன.
பணம் சம்பாதிப்பதற்காக செலுத்தும் கவனத்தில் ஒரு சிறிய பகுதியையாவது ஆரோக்கியத்திற்காக ஒதுக்கினால், பல நோய்களைத் தவிர்க்க முடியும். இதனால் மருத்துவச் செலவுகளையும் குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில், பலரும் தங்களது ஆரோக்கியத்தை எளிமையாகக் காக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக நடைப்பயிற்சியே அமைந்துள்ளது.
ஆம், உண்மை தான். தினமும் சுமார் 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்தாலே உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கவும், நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் குறையவும் வாய்ப்பு உள்ளது.
விறுவிறுப்பான நடைப்பயிற்சி இதயத்தை வலுப்படுத்தி இரத்த நாளங்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறையவும் உதவுகிறது. நடைப்பயிற்சி கால்கள், இடுப்பு மற்றும் முதுகுத் தசைகளை வலுப்படுத்துகிறது. மூட்டுகளின் இயக்கத்தை சீராக்கி வலி மற்றும் இறுக்கத்தை குறைக்க உதவுகிறது.
நடைப்பயிற்சி எலும்புகளின் வலிமையை அதிகரித்து வயது மூப்பில் ஏற்படும் பலவீனத்தை குறைக்கிறது. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
நடைப்பயிற்சியின் மூலம், மூளைக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால், நினைவாற்றல் மற்றும் கவன திறனை மேம்படுத்துகிறது. மேலும் செரிமான செயல்பாடும் சீராக நடைபெற உதவுகிறது. உடல், கை கால் வலி போன்ற பல பிரச்சனைகள் நாம் நடைப்பயிற்சி செய்வதால் குணமாகும். இதய நோய் உள்ளவர்கள், நடைப்பயிற்சி செய்ய விரும்பினால் ஒருமுறை மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். நடைப்பயிற்சியின் போது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்த வேண்டும்.
Also Read: இத மட்டும் பண்ணுங்க… 10 நாள் ஆனாலும் மல்லிகைப்பூ ஃப்ரெஷ்ஷா இருக்கும்!



