பெண் குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றக்கட்டமாக அமைவது முதல் மாதவிடாய். இது ஒரு இயல்பான உடல் வளர்ச்சி நிகழ்வு மட்டுமல்ல; உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாகும். இந்த கட்டத்தில் குழந்தைகள் குழப்பம் அல்லது பயம் உணர வாய்ப்பு உள்ளது. அதனால், பெற்றோர் முன்கூட்டியே தயார் செய்து, சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம்.
மாதவிடாய் திடீரென வருவதில்லை, பொதுவாக 10–15 வயதுக்குள் தொடங்கும். சராசரி வயது சுமார் 12 ஆகும். அதற்கு முன் சில அறிகுறிகள் படிப்படியாக தோன்றும். முதலில் மார்பக வளர்ச்சி, இது பொதுவாக முதல் அறிகுறியாகும்.குழந்தைகள் திடீரென உயரமாகவும்,பருமனாகவும் மாறுதல், அக்குள் மற்றும் பிற பகுதிகளில் முடி வளர்ச்சி ஏற்படுதல், இடுப்பு அகலமடைதல் மற்றும் வெள்ளைப்படுதல் (white discharge) போன்றவை மாதவிடாய் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கலாம். வயிற்றுவலி ,மனநிலை மாற்றங்கள், கவலை, சோக உணர்வு போன்றவை ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படலாம். உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி வெட்கம் அல்லது குழப்பம் கொள்ளலாம். பெற்றோர் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் .
இந்த கட்டத்தில் உடலுக்கு கூடுதல் சத்துக்கள் தேவைப்படும்,
கீரை வகைகள் (முருங்கைக்கீரை, பசலைக்கீரை),பேரிச்சம்பழம், உலர் திராட்சை,பயறு வகைகள், கால்சியம் (பால், தயிர்),புரதச்சத்து,அதிக தண்ணீர் போன்ற சமநிலைக்குசீரான உணவு முறையும், நேரமான உணவுமுறையும் அவசியம். இந்த நேரத்தில் சுகாதாரம் மிகவும் அவசியம்.சானிட்டரி பேடுகளை 4–6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.தனிப்பட்ட பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.சுத்தமான மற்றும் காற்றோட்டமான உள்ளாடைகள் பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் அகற்ற வேண்டும்.
பெற்றோர் இந்த காலத்தில் செய்ய வேண்டியது குழந்தையுடன் அன்பாகவும்,நெருக்கமாகவும் திறந்த மனதுடனும் பேச வேண்டும்.
மாதவிடாய் பற்றி வெட்கப்பட வேண்டியதில்லை என்பதை உணர்த்த வேண்டும்.முதன்முறையாக வரும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிக்கொடுங்கள்.முதல் மாதவிடாய் என்பது ஒரு புதிய ஆரம்பம். சரியான அறிவும், உணர்ச்சி ஆதரவும், சுகாதார பழக்கங்களும் இருந்தால், இந்த மாற்றத்தை குழந்தைகள் நம்பிக்கையுடனும் ஆரோக்கியமாகவும் எதிர்கொள்ள முடியும்.பெற்றோர் தரும் ஆதரவே குழந்தையின் தைரியத்தின் அடித்தளம்.
Also Read:லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்கிய ‘DC’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!



