பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இதனால் தமிழ் நாட்டிற்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மற்றும் காற்று அழுத்த மாற்றங்களால் உலகளாவிய வானிலை முறைகளை மாற்றியமைக்கும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். இது பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலை சுமார் 23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள மேற்கு பசிபிக் பகுதியில் வெதுவெதுப்பான நீரும், தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் கடற்கரைக்கு அப்பால் குளிர்ந்த நீரும் காணப்படும்.
எல் நினோவின் போது, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட வெப்பமடைகிறது, சில சமயங்களில் 25 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது. இந்த வெப்பமயமாதல், பூமத்திய ரேகை நெடுகிலும் வீசும் காற்றை, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுவதற்குப் பதிலாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் திசைமாறச் செய்கிறது. இந்த மாற்றம், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் வெப்ப அலைகளுக்கும், மேற்கு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கனமழைக்கும் வழிவகுக்கிறது.
அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையால் சமீபத்தில் வட இந்தியாவைப் பாதித்ததைப் போன்ற நீடித்த வெப்ப அலைகள் உட்பட, உலகெங்கிலும் வானிலை சீர்குலைவுகளைத் தூண்டுகிறது. இது வறட்சி, விவசாயசேதம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள்சபை ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வறட்சியைக் கொண்டு வந்துள்ளது.வழக்கமாக, செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இந்தியப்பெருங்கடலில் அதிக எண்ணிக்கையிலான குறைந்த காற்றழுத்தப் பகுதிகள் உருவாகி மழை பெய்யும். ஆனால், எல் நினோ விளைவால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, காற்று வேகம் அதிகரித்து,வடகிழக்குப் பருவக்காற்றுகள் ஒரு ஆழமான குறைந்த காற்றழுத்தப் பகுதியை உருவாக்கி கனமழையைத் தருக்கூடும். இதனால் ஒரே நேரத்தில் 100 மி.மீ வரை மழை பெய்யக்கூடும். மேலும், காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ-க்கு மேல் அதிகரித்து புயலாக மாறுகிறது. இது மணிக்கு மணிக்கு 160 கி.மீ வேகத்தை எட்டினால், அது மிகக் கடுமையான புயலாக மாறும் வாய்ப்புள்ளது.எனவே, மக்கள் பேரிடர் மேலாண்மையை கவனமாகப் பின்பற்ற வேண்டும். இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் வெளியிடும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Also Read:பெரம்பூர் மக்களுக்காக பிரத்யேக மொபைல் செயலி.. முதல்வர் விஜய்யின் புதிய முயற்சி!



