காதல் என்றாலே ஒருகாலத்தில் அழகு, இனிமை என்று பல வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் காதல் என்றாலே பலருக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படித்தான் இருக்கின்றன. காதலுக்காக நடைபெறும் கொலைகள் ஒரு புறம் இருக்க, கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு காலம் மாறிவிட்டது.
காதல் என்றாலே அதில் உணர்வுகளும், சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்திருக்கும் என்ற நிலை மாறி, இன்றைய டிஜிட்டல் உலகில் காதல் உறவுகளில் நேர்மை எந்த அளவுக்கு உள்ளது என்ற பயமும், கேள்வியும் பலரிடமும் எழுகிறது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான ஆய்வு சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.
இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் வசிக்கும் ஜோடிகளில், காதல் உறவில் அதிக நேர்மையாக இருப்பவர்கள் யார் என்பதை கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெளியான முடிவுகள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. குறிப்பாக, சென்னை நகரம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஆய்வில், காதல் குறித்த பொதுவான கேள்விகளுக்கு பதிலாக, தற்போதைய ஜோடிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை தொடர்பான அம்சங்கள் ஆராயப்பட்டன. துணையின் மொபைல் போனை ரகசியமாக பார்ப்பதுண்டா, முன்னாள் காதல் குறித்து உண்மையை மறைக்கிறார்களா, சம்பளம் அல்லது செலவுகள் தொடர்பாக பொய் சொல்கிறார்களா என்பது போன்ற பல கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன.
மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் வசிக்கும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில், 72 சதவீத மதிப்பெண்களுடன் சென்னை, “அதிக நேர்மையான ஜோடிகள் வாழும் நகரம்” என்ற இடத்தைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் பெரும்பாலானோர் தங்களது துணைக்குத் தெரியாமல் மொபைல் கடவுச்சொல்லை மாற்றுவது அல்லது சில உரையாடல்களை மறைப்பது வழக்கமாக இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால், சென்னையில் பெரும்பாலான ஜோடிகள் தங்களது மொபைல் கடவுச்சொல்லை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்வதோடு, இருவருக்கும் இடையே பெரிய ரகசியங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கடந்தகால காதல் அனுபவங்கள் குறித்து தற்போதைய துணையிடம் மறைக்காமல் பேசுவதிலும் சென்னை இளைஞர்கள் அதிக வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், சம்பளம், கடன், குடும்பச் செலவுகள் உள்ளிட்ட பணம் தொடர்பான விஷயங்களையும் சென்னை ஜோடிகள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதாகவும், பொருளாதார விவரங்களை மறைக்கும் பழக்கம் குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: நடுரோட்டில் உல்லாசத்திற்கு அழைத்த கணவன்… நிர்வாணமாக கிடந்த மனைவி… கோவையில் அதிர்ச்சி சம்பவம்!



