ராமநாதபுரத்தில் தந்தையை இழந்த சிறுமி ஒருவரை, அவரது சொந்த தாத்தாவே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அவர் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் மூவலூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர் உயிரிழந்த நிலையில், தற்போது இவரது மனைவி மற்றும் 15 வயது மகள் அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியின் தாய்வழி தாத்தாவான 73 வயதான ராசு, அடிக்கடி இவர்களின் வீட்டிற்க்கு வந்து சென்றுள்ளார்.
இதனால், தந்தையை இழந்த சிறுமியும் தனது தாத்தாவிடம் பாசமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ராசு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் பதறிப்போய் வீட்டிற்கு வந்த தாய், ராசுவை கண்டித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
ஆனால் ராசு, மீண்டும் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மதியம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தாய், நடந்ததை எல்லாம் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது உறவினர்கள் ராசுவை சரமாரியாக தாக்கி கண்டித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது தாய் சிறுமியை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாயும், சிறுமியும் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 73 வயதுடைய ராசு மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியை மிரட்டி பலமுறை அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ராசு தெரிவித்துள்ளார். தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்துவந்த 15 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக 73 வயது தாத்தா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: கணவனைக் கட்டிலில் கட்டிவைத்து மனைவி செய்த காரியம்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்!


