கடந்த 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் ரத்னகிரி – சிந்துதுர்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மகாராஷ்டிராவின் முன்னாள் எம்பி விநாயக் ராவத். இவரது மகன் ஜிதேஷ் ராவத்திற்கும் கிரிஜா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிரிஜா ராவத் காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த புகாரில், அவர் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு மனதளவிலும், உடலளவிலும் பல கொடுமைகள் நடந்ததாக கூறியுள்ளார். சாமியார்களிடம் அழைத்துச்சென்று கோமியம் குடிக்க வைத்து, தலைமுடியை பிடுங்கி பூஜை செய்ததாக கூறியுள்ளார். மேலும், இது குறித்து அவர் “எனது கணவருக்கு இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லை. ஆனால் அதனை மறைக்க கொங்கன் பிராந்தியத்தில் உள்ள சாமியார்களிடம் என்னை அழைத்து சென்று துன்புறுத்தினர். முடிந்தவரை பிரச்சனையை தீர்க்க நான் முயன்றேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என்று கூறியிருந்தார்.
கிரிஜா அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் ஜிதேஷ் ராவத், மாமனார் மற்றும் சாமியார்களான ஃபிரோஸ் பாபா, காசி பாபா ஆகியோர் மீது போலீசார் பில்லி – சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்டம் 2013ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் விநாயக் ராவத் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறியுள்ளார்.
முன்னாள் எம்பி மீது பதியப்பட்ட இந்த வழக்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read: நடுரோட்டில் தாயின் கண் முன்னே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்; தாய் எடுத்த அதிரடி நடவடிக்கை!



