பற்களின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்க, தினமும் சரியான முறையில் பல் துலக்குவது மிகவும் அவசியம். குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது நல்ல பழக்கமாக பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காரணம், இரவு முழுவதும் தூங்கும் நேரத்தில் உமிழ்நீர் சுரப்பு குறைவதால், வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்து பற்களின் மேற்பரப்பில் பற்காரை உருவாகத் தொடங்குகிறது. எனவே, காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது இந்த பாக்டீரியாக்களை அகற்றி, வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
அதன்பிறகு உணவு உட்கொள்ளும்போது, அதிலுள்ள சர்க்கரை மற்றும் மாவுச்சத்து போன்றவை பாக்டீரியாக்களுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்கும் வாய்ப்பு குறைகிறது. மேலும், ஃபுளூரைடு கலந்த பற்பசையை பயன்படுத்தி பல் துலக்குவது பற்களின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கை வலுப்படுத்தி, அமிலத்தன்மை காரணமாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
பலருக்கு காலை நேரத்தில் காபி, தேநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறு அல்லது சிட்ரஸ் வகை பழங்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. இவ்வகை அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள் பற்சிப்பியை தற்காலிகமாக மென்மையாக்கும். இதுபோன்ற உணவுகளை சாப்பிட்ட உடனே பல் துலக்கினால், பற்சிப்பி தேய்ந்து, காலப்போக்கில் பற்கள் பலவீனமடையவும், கூச்சம், அரிப்பு மற்றும் பல் சொத்தை போன்ற பிரச்சினைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, காலை உணவுக்குப் பிறகு பல் துலக்க வேண்டியிருந்தால், குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் வரை காத்திருப்பது நல்லது. இந்த இடைவெளியில் உமிழ்நீர் வாயில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து, பற்சிப்பி மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்ப உதவுகிறது.
உணவுக்குப் பிறகு உடனடியாக பல் துலக்க முடியாத சூழலில், முதலில் தண்ணீரால் வாயைக் கொப்பளிப்பது பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், சர்க்கரை சேர்க்காத சூயிங் கம்மை மெல்வதும் உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, வாயில் உருவாகும் அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது.
வாய் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க, ஒரு நாளில் இரண்டு முறை குறைந்தது இரண்டு நிமிடங்கள் பல் துலக்குவது, பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்ற பல் நூலை பயன்படுத்துவது, நாக்கை சுத்தம் செய்வது மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை மேற்கொள்வது போன்ற பழக்கங்களையும் கடைபிடிப்பது நல்லது.
பற்களை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் பாதுகாக்க விரும்பினால், காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பே பல் துலக்குவது சிறந்த வழிமுறையாகும். உணவுக்குப் பிறகு துலக்க விரும்புபவர்கள், பற்சிப்பிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறிது நேரம் இடைவெளி விட்டு பல் துலக்குவது பாதுகாப்பான நடைமுறையாக கருதப்படுகிறது.
Also Read: மூட்டு வலி தாங்க முடியலையா? அப்போ அடிக்கடி இதை சாப்பிடுங்க… வித்தியாசம் உங்களுக்கே தெரியும்!



