முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. “வேறு வழக்கில் கைது செய்யப்பட மாட்டேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே நேரில் ஆஜராக முடியும்” என போலீசாருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஜாமீன் விதிகளின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் தினமும் காலை, மாலை என இருவேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு, தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரைப் பேரம் நடந்ததாகக் கூறப்படும் வழக்கின் பின்னணியில் வழங்கப்பட்டதாகும்.ஆனால், கடந்த ஒரு வாரமாக இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஜாமீன் நிபந்தனையை மீறியதாகக் கருதி, அவர்களின் நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய காவல்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாமீன் ரத்து செய்யப்பட்டால், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையாக இருவரையும் கைது செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருவல்லிக்கேணி போலீசாருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ள செந்தில்பாலாஜி, “நான் நேரில் ஆஜரானால் வேறு வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள். கைது செய்ய மாட்டோம் என உறுதி தந்தால் ஆஜராகிறேன் ” என்று எழுதியுள்ளார்.இதற்கு பதிலளிக்கும் வகையில், காவல்துறை வட்டாரங்களில், “நிபந்தனை விதித்தது நீதிமன்றம். வேறு வழக்கில் கைது செய்யப்படமாட்டார் என்று காவல்துறை முன்கூட்டியே எந்தவித உத்தரவாதமும் வழங்க முடியாது. அவர் ஆஜராக வேண்டுமா, வேண்டாமா என்பது அவரது முடிவு. ஆஜராகாத பட்சத்தில், சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்ற கருத்து நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், செந்தில் பாலாஜி ஏன் வேறு வழக்கில் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, சுமார் ₹35 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விவரங்கள் தொடர்பாக சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



