மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சோதனையில், பொதுமக்களின் உடல்நலனை பெரிதும் பாதிக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய அளவில் கலப்பட பால் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் தாராஷிவ் மாவட்டம், பூம் தாலுகாவில் நடத்திய ஆய்வின் போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விற்பனைப் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 2,30,470 கிலோ தரமற்ற பால் பவுடர் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தப் பால் பவுடருடன் டிடர்ஜென்ட், யூரியா மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான பாம் ஆயில் உள்ளிட்ட பொருட்கள் கலந்து, சுமார் 23 லட்சம் லிட்டருக்கும் அதிகமான செயற்கை பால் தயாரிக்கப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணையில் மேலும், 100 லிட்டர் இயற்கை பாலில் சுமார் 10 லிட்டர் செயற்கை பாலை கலந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் பாலின் நிறம், சுவை, வாசனை மற்றும் அடர்த்தியில் பெரிய மாற்றம் தெரியாமல் நுகர்வோரை ஏமாற்ற முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலில் இயற்கையாக உருவாகும் நுரை போன்ற தோற்றத்தையும் இந்த கலப்பட முறை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த முறையில் தயாரிக்கப்பட்ட கலப்பட பால் மகாராஷ்டிராவின் பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிடர்ஜென்ட், யூரியா மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான பாம் ஆயில் போன்ற ரசாயனங்கள் கலந்த பாலை தொடர்ந்து அருந்துவது உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், செரிமான மண்டலத்தில் புண்கள், குடல் சேதம் மற்றும் நீண்டகால உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.



