உங்களை மட்டும் கொசு அதிகம் கடிக்குதா? அதுக்கு காரணம் இது தான்… விஞ்ஞானம் சொல்லும் ஆச்சரிய தகவல்!

mosquito bite

ஒரே இடத்தில் பலர் அமர்ந்திருந்தாலும், சிலரை மட்டுமே கொசுக்கள் அதிகமாக சுற்றி வந்து கடிப்பதை நாம் பலமுறை கவனித்திருப்போம். “என்னை மட்டும்தான் கொசு கடிக்கிறது” என்று பலரும் நினைத்துக் கொள்வார்கள். இதற்கு பல காரணங்களை நாம் யூகித்தாலும், உண்மையில் கொசுக்கள் மனிதர்களைத் தேர்வு செய்வதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட சிலரின் உடலில் இருந்து வெளியேறும் இயற்கையான சிக்னல்கள் கொசுக்களை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உலகின் மிகவும் ஆபத்தான உயிரினம் என்று சொன்னால் பலருக்கும் பாம்பு, சிங்கம் அல்லது புலி போன்றவைதான் நினைவுக்கு வரும். ஆனால் மனிதர்களுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் உயிரினம் கொசு தான். காரணம், கொசுக்கள் மூலம் பரவும் பல்வேறு நோய்களால் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கொசுக்கள் சும்மா யாரையும் தேடி வந்து கடிப்பதில்லை. அவை தங்களுக்கு ஏற்ற இலக்கை கண்டறிய பல்வேறு உயிரியல் அறிகுறிகளை பயன்படுத்துகின்றன. குறிப்பாக பெண் கொசுக்கள் மட்டுமே முட்டை உற்பத்திக்குத் தேவையான புரதத்திற்காக ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

அதற்காக அவை மனிதர்களின் சுவாசம், உடல் வெப்பம், வியர்வை வாசனை மற்றும் சருமத்தில் உள்ள வேதிப்பொருட்களை வைத்து தங்களின் இலக்கை தேர்வு செய்கின்றன. முதலில் கொசுக்கள் தொலைவில் இருந்தே மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை உணர்கின்றன. நாம் சுவாசிக்கும் போது வெளியேறும் இந்த வாயு, கொசுக்களுக்கு ஒரு முக்கியமான அடையாளமாக உள்ளது. அதிக உடல் எடை கொண்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதால், அவர்களை கொசுக்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

அதன் பிறகு, கொசுக்களின் கவனம் மனிதர்களின் உடல் வாசனை மீது செல்கிறது. ஒவ்வொருவரின் சருமத்திலும் இருக்கும் பாக்டீரியாக்கள், இயற்கை எண்ணெய்கள் மற்றும் வியர்வையில் உள்ள வேதிப்பொருட்கள் சேர்ந்து தனித்துவமான வாசனையை உருவாக்குகின்றன. இந்த வாசனையில் இருக்கும் சிறிய வேறுபாடுகளைக் கூட கொசுக்கள் உணர முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது அதிகமாக வேலை செய்த பிறகு கொசுக்கள் அதிகம் கடிப்பதை சிலர் கவனித்திருக்கலாம். இதற்கு காரணம், அந்த நேரத்தில் உடல் வெப்பநிலை அதிகரிப்பதும், வியர்வையில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் அம்மோனியா போன்ற சேர்மங்கள் வெளியாவதும் ஆகும்.

இவை கொசுக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. பலரும் “O வகை ரத்தம் உள்ளவர்களை கொசுக்கள் அதிகம் விரும்பும்” என்று நம்புகின்றனர். ஆனால், ரத்த வகை மட்டும் கொசுக்கள் கடிப்பதற்கான முக்கிய காரணம் அல்ல என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. உடல் வாசனை, மரபணுக்கள், சருமத்தின் வேதியியல் தன்மை மற்றும் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவு போன்ற பல காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், சிலரை மட்டும் கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு அவர்களின் ரத்தம் இனிப்பாக இருப்பது காரணம் என்ற கருத்து உண்மையல்ல. ஒவ்வொரு மனிதரின் உடலும் உருவாக்கும் தனித்துவமான இயற்கை சிக்னல்கள்தான் கொசுக்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

Also Read: இந்த ஸ்நாக்ஸை அடிக்கடி சாப்பிடாதீங்க… இதய நோயுடன் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Saranya

You May Like