திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை பல பெண்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளத் தயங்கும் சூழலில், விஜய் டிவியின் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவர் பகிர்ந்த அனுபவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கணவரின் கட்டாய உடலுறவு வற்புறுத்தலால் தனது திருமண வாழ்க்கையே சிதைந்ததாக அவர் கண்ணீருடன் கூறியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் தோல்வி அல்லது விவாகரத்துக்குப் பிறகு புதிய வாழ்க்கைத் துணையைத் தேடும் நபர்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் ஆதரவும் விமர்சனமும் பெற்று வருகிறது. சிலர் இது இரண்டாவது வாழ்க்கையை தொடங்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருப்பதாக கூறினாலும், மற்றொரு தரப்பினர் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் அவசியம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில், தனது கடந்தகால திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசிய பெண் போட்டியாளர், அந்த உறவில் சந்தித்த மனவேதனைகளை பகிர்ந்தார்.
தனது முன்னாள் கணவர் அடிக்கடி உடலுறவுக்கு வற்புறுத்தியதாகவும், தனது விருப்பமின்மையையோ உடல்நிலையையோ ஒருபோதும் மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மாதவிடாய் காலத்தில் கடுமையான உடல்நலக் குறைவு இருந்தபோதும், சில நாட்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதை கூட முன்னாள் கணவர் ஏற்கவில்லை என அவர் வேதனையுடன் தெரிவித்தார். தொடர்ந்து ஏற்பட்ட இந்த வற்புறுத்தல்களே திருமண வாழ்க்கையின் மீது வெறுப்பை உருவாக்கியதாகவும், அந்த அனுபவங்கள் இன்றளவும் தன்னை மனரீதியாக பாதித்து வருவதாகவும் அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் விட்டு அழுததால், அருகில் இருந்த போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தி தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறினர். அந்த காட்சிகள் நிகழ்ச்சியை பார்த்த பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், திருமண உறவிலும் பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம் என்பதை பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மனைவி என்பதற்காக எந்த நேரத்திலும் உடலுறவை கட்டாயப்படுத்த முடியாது என்றும், அதுபோன்ற வற்புறுத்தல்கள் குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாகவே கருதப்பட வேண்டும் என்றும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
அதேநேரத்தில், இத்தகைய உறவில் இருந்து வெளியேறிய அந்த பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம், நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களது கடந்தகால கசப்பான அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருவது குறித்து சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையில், நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் பல போட்டியாளர்களுக்கு இன்னும் பொருத்தமான ஜோடி அமையாததால் போட்டி விறுவிறுப்பாக நகர்கிறது. ஏற்கனவே சிலர் வெளியேறிய நிலையில், புதிய வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகையால் நிகழ்ச்சியில் புதிய திருப்பங்கள் உருவாகியுள்ளன.
Also Read: கொடூரத்தின் உச்சம்! 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் காய்ச்சிய கத்தியால் சூடு வைத்த ஆசிரியை!



