இன்றைய காலத்தில் குழந்தைகளை ஒரு நிமிடம் கூட கண்காணிக்காமல் விடுவது ஆபத்தானதாக மாறியுள்ளது. வீட்டு வாசல், தெரு அல்லது அருகிலுள்ள பகுதி என எங்கு விளையாடினாலும், குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சிறிய கவனக்குறைவு கூட குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறலாம். அதனை உணர்த்தும் வகையில், 4 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ருய்யாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியரின் 4 வயது மகள், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். மாலை வரை குழந்தை வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் சிறுமி கிடைக்காததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் கிடைத்ததும் மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. சிறுமியை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.
போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் சிறுமியை பேருந்து நிலையம் நோக்கி அழைத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை அடையாளம் கண்டு போலீசார் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஆதிலாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டதுடன், கடத்தலில் தொடர்புடைய இரண்டு பெண்களை கைது செய்தனர்.
விசாரணையில், மனிதக் கடத்தல் கும்பலிடம் அதிக பணத்திற்கு விற்பனை செய்வதற்காகவே சிறுமியை கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புகார் கிடைத்த ஆறு மணி நேரத்திற்குள் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



