மதிப்பெண்கள் ஒரு குழந்தையின் திறமையை முழுமையாக அளவிட முடியாது. ஆனால் சில பெற்றோர்கள் அதிக மதிப்பெண்களையே வெற்றியின் அடையாளமாக நினைக்கிறார்கள். இதனால் பல குழந்தைகள் சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பாராட்ட வேண்டிய நேரத்தில் கண்டிப்பும், ஊக்கப்படுத்த வேண்டிய இடத்தில் அழுத்தமும் கொடுக்கப்படும்போது, அதன் விளைவுகள் சில நேரங்களில் மிகவும் வேதனையாக முடிகின்றன. அப்படிப்பட்ட ஒரு சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது 9 வயது மகள் புகழினி, மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த அறிவியல் தேர்வில் 15-க்கு 13 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். வழக்கம்போல் தேர்வுத்தாளில் பெற்றோரின் கையெழுத்து பெறுவதற்காக அதை வீட்டிற்கு கொண்டு வந்தார்.
தேர்வுத்தாளைப் பார்த்த தாய், இரண்டு மதிப்பெண்கள் குறைந்ததைப் பற்றி சிறுமியிடம் கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புகழினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், குழந்தைகளிடம் மதிப்பெண்களை விட அவர்களின் மனநிலைக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.
Also Read: “எப்படி நீ கர்ப்பமான?”… கணவருக்கு வந்த சந்தேகம்; 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்!



