கள்ளக்காதல் பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. சில நிமிட ஆசைக்காக பலர் தங்கள் வாழ்க்கையையும், குடும்பத்தையும் இழந்து வருகின்றனர். கணவன், மனைவிக்கு இடையே நம்பிக்கை உடைந்தால் அதன் விளைவு சில நேரங்களில் கொடூரமாக மாறுகிறது. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு சகாதேவன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (37). இவரது மனைவி சோனியா (28). இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (22) என்பவருடன் சோனியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் தெரிந்த பிறகு, சக்திவேல் தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் சோனியா அந்த உறவை கைவிடவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சோனியா, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த 25-ம் தேதி இரவு ஆகாஷை வீட்டிற்கு வரவழைத்தார். ஆகாஷ் தனது நண்பருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மூவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சக்திவேலின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்ய முயன்றனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட சக்திவேல், மூவரையும் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வெளியே ஓடினார்.
பின்னர் அவர் திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சோனியா மற்றும் ஆகாஷை கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஆகாஷின் நண்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Also Read: 15-க்கு 13 மதிப்பெண்… திட்டித்தீர்த்த தாய்; விரக்தியில் 9 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!



