இந்தோனேசியாவில் 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயங்கரக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான 41 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சுராபாயாவில் (Surabaya) இருந்து தெற்கு சுலாவெசியில் அமைந்துள்ள மக்காசார் (Makassar) நகரை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இக்கப்பலில் பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட மொத்தம் 271 பேர் பயணித்துள்ளனர்.
கடல் வழியே பயணித்துக் கொண்டிருந்தபோது, மதுரா தீவு (Madura Island) அருகே வந்த சமயம் எதிர்பாராதவிதமாக கப்பலில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அடுத்தடுத்து தீ மளமளவென கப்பல் முழுவதும் பரவியதால், அதிர்ச்சியடைந்த கப்பலின் கேப்டன் உடனடியாக மீட்புக் குழு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த அவசரகால மீட்புப் படையினரும், அப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பிற கப்பலில் இருந்தவர்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அக் கோர தீயில் இருந்து பெரும்பாலான பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், விபத்தின் போது கடலில் குதித்தோ அல்லது இடிபாடுகளுக்குள் சிக்கியோ மாயமான 41 பேரை கண்டுபிடிக்கும் தீவிரத் தேடுதல் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இக்கப்பல் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவராத நிலையில், இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : அப்பளம் போல் நொறுங்கிய கார்..!! 5 பேர் துடிதுடித்து மரணம்..!! பொள்ளாச்சியில் சோகம்..!!



