தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், வட கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு வேளைகளில் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : காவிரி விவகாரத்தில் அடுத்த பாய்ச்சல்..! இனியும் கெஞ்ச முடியாது..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய தமிழக அரசு..!



