வெளிநாட்டில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றிய கணவர், சந்தேகமும் குடும்பத் தகராறும் முற்றிய நிலையில் மனைவியையும் மாமியாரையும் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த இரண்டு சிறுமிகள் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறிய நிலையில், இரட்டைக் கொலையை அரங்கேற்றிய நபர் ரத்தம் சொட்டிய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (48). இவரது மனைவி சர்மிளா (42). இந்த தம்பதியருக்கு 7-ஆம் வகுப்பு மற்றும் 4-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லமுத்து துபாய்க்கு வேலைக்குச் சென்றார். இதையடுத்து, சர்மிளா தனது இரண்டு குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் வசித்து வந்தார். அவருடன், துபாயில் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய அவரது தாய் பத்மாவதியும் சில மாதங்களாக தங்கி வந்தார்.
இதற்கிடையில், வெளிநாட்டில் இருந்த செல்லமுத்துவுக்கு மனைவியின் நடத்தை மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தான் அனுப்பிய பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்தும் கணக்கு கேட்டதால், கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கணவருடன் வாழ விருப்பமில்லை என்று முடிவு செய்த சர்மிளா, தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் குடியேறினார். உறவினர்கள் பலமுறை சமரசம் செய்ய முயன்றும், இருவரும் மீண்டும் ஒன்றாக வாழவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் துபாயிலிருந்து ஊருக்கு வந்த செல்லமுத்து, மனைவி தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு அக்கம் பக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இன்று காலை சுமார் 8 மணி அளவில் செல்லமுத்து மீண்டும் மனைவி வசித்த வீட்டுக்குச் சென்றார். அப்போது குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். வீட்டிற்குள் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறியது.
ஆத்திரமடைந்த செல்லமுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சர்மிளாவை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தாய் பத்மாவதியையும் அதே ஆயுதத்தால் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த இரண்டு சிறுமிகள் கண்முன்னே நடந்ததால், அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தாயையும் பாட்டியையும் இழந்த சோகத்தில் குழந்தைகள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களையும் கலங்கச் செய்தது.
இரட்டைக் கொலையை அரங்கேற்றிய செல்லமுத்து, ரத்தம் சொட்டிய அரிவாளுடன் நேராக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாயையும் பாட்டியையும் இழந்ததோடு, தந்தையும் கைது செய்யப்பட்டதால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட இரண்டு சிறுமிகளையும், போலீசார் உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: கல்விக்கூடமா? கலவரக் கூடமா?… மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியையின் சேலையை இழுத்த ஆசிரியை!



