குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களின் உணவு பழக்கம் மிகவும் முக்கியமானது. சிறு வயதில் கிடைக்கும் சரியான ஊட்டச்சத்துகள் தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக அமைகிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கவும், உடல் வலிமையாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது அவசியம். குறிப்பாக புரதச்சத்து நிறைந்த முட்டை, பால், தயிர், பருப்பு வகைகள், பயறு வகைகள் போன்றவை குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் உடல் வலிமைக்கும் உதவுகின்றன.
அதேபோல், காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. கேரட், பீட்ரூட், கீரை வகைகள், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொடுக்கலாம். சிறுதானியங்களான ராகி, கம்பு, தினை, வரகு போன்றவை குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. குறிப்பாக ராகி எலும்புகளின் வலிமைக்கு உதவும் கால்சியம் நிறைந்த உணவாக பார்க்கப்படுகிறது.
மேலும், பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகள் மற்றும் விதைகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல கொழுப்புச் சத்துக்கும் உதவுகின்றன. ஆனால், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற அளவில் மட்டுமே இவற்றை கொடுக்க வேண்டும். இன்றைய காலத்தில் குழந்தைகள் அதிகமாக விரும்பும் பாக்கெட் உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் மற்றும் ஜங்க் ஃபுட் போன்றவற்றை தொடர்ந்து கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இவை உடலுக்கு தேவையான சத்துக்களை குறைத்து, ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சுவையாகவும் சத்தாகவும் வீட்டில் தயாரிக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதன் மூலம், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவ முடியும். சிறு வயதில் உருவாகும் நல்ல உணவு பழக்கங்கள், குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கான முக்கிய முதலீடாக இருக்கும்.


