தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மதுபானங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சென்னையின் கொளத்தூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 30 முக்கியப் பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே, கடந்த 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இவ்வாறு முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் ஈட்டப்பட்ட கூடுதல் வருவாயை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்தே மீட்டெடுத்து வசூலிக்க வேண்டும். அத்துடன், அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் குறிப்பிட்டுள்ள 30 கடைகளில், 5 கடைகள் ஏற்கனவே நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன” என்று கூறி, சம்பந்தப்பட்ட கடைகளின் மதுபான இருப்பு மற்றும் விற்பனைப் பதிவேடுகளை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையைத் தீவிரமாக ஆய்வு செய்த நீதிபதி இளந்திரையன், கடைகளில் முறையான ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படாததையும், வாடிக்கையாளர்களுக்கு ரசீதுகள் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் உடனடியாக ரசீது புத்தகங்களைப் பராமரிக்க வேண்டும் என்றும், மதுபானங்களை வாங்கும் நுகர்வோருக்கு ஒவ்வொரு பாட்டிலுக்கும் தவறாமல் ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் அமல்படுத்தியது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Read More : தமிழகத்தின் மொத்த கடன் எத்தனை கோடி தெரியுமா? வட்டி மட்டுமே இவ்வளவா? நிதியமைச்சர் பரபரப்பு தகவல்..!!



