கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரை வழிமறித்த கும்பல், கொள்ளையடித்ததுடன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள காதேர் கிராமம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரை சிலர் வழிமறித்துள்ளனர்.
பின்னர் அந்த தம்பதியை தாக்கிய கும்பல், அவர்களிடம் இருந்த செல்போன், பர்ஸ், நகை உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, 26 வயதான அந்தப் பெண்ணை வண்டியில் இருந்து கீழே இழுத்து, அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். மனைவியை காப்பாற்ற கணவர் ஓடிச் சென்றபோது, அவரையும் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது கண் முன்னாலேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் சத்தமாகக் கத்தி உதவி கேட்டுள்ளார். அதே நேரத்தில், சாலையில் இருசக்கர வாகனம் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் சந்தேகமடைந்து வாகனத்தை நிறுத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே அருகில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த கும்பல், பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியது. இதனால் அந்தப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட தம்பதியினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தினர். அதில் தொடர்புடைய பப்லூ பஞ்சாரா (23), சோட்டு பஞ்சாரா (28), சர்தார் பஞ்சாரா (30), மகேந்திர பஞ்சாரா (20), தினேஷ் பஞ்சாரா (28) ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தம்பதியினரிடம் பறிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



