உத்தரப் பிரதேசத்தில் குடும்ப பிரச்சினையால் விஷம் அருந்தியதாகக் கூறப்படும் ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது வீடியோ எடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப் குமார் என்பவர் வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.
அவருக்கு மனு தேவி என்ற மனைவியும், நான்கு வயது மகனும் உள்ளனர். போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, மனு தேவிக்கும் அதே பகுதியில் வசிக்கும் திலீப் என்பவருக்கும் கடந்த ஓராண்டாக பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து அனுப் குமார் பலமுறை தனது மனைவியிடம் கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி, தனது மனைவியும் திலீப்பும் ஒன்றாக இருந்ததை பார்த்ததாகக் கூறப்படும் அனுப் குமார், மனவேதனையில் விஷம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், திலீப்பை வீட்டுக்கு வரவழைத்து, அனுப் குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். உண்மையில் என்ன நடந்தது, சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, அலட்சியம் அல்லது வேறு ஏதேனும் குற்றச்செயல் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இதுவரை வெளியான தகவல்கள் அனைத்தும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையிலானவை என்றும், அதிகாரப்பூர்வ விசாரணை முடிவடைந்த பிறகே சம்பவத்தின் முழு விவரங்கள் உறுதி செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read: சவுக்கு சங்கர் குடும்பத்தில் பேரதிர்ச்சி… 13 வயது மகன் தற்கொலை!!



