இன்றைய நவீன சூழலில் தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற அசௌகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் மருத்துவரை அணுகாமல் நேரடியாக மருந்துக் கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சிறு சிறிய வலிகளுக்குக் கூட சுய மருத்துவம் செய்து கொள்ளும் இந்த போக்கு, நாளடைவில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மிக கொடூரமாக பாதிக்கும் எனச் சிறுநீரக நோய் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல சிறுநீரக நோய் நிபுணர் பாக்கியஸ்ரீ விவரிக்கையில், “சமீபகாலமாக மூட்டு வலி, முதுகுவலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் தாங்களாகவே மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகின்றனர். வலி தோன்றும் போதெல்லாம் வலி நிவாரணிகளை மட்டுமே தீர்வாகக் கருதி எடுத்துக்கொள்வது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி இத்தகைய வலி நிவாரணிகளைத் தொடர்ச்சியாகவோ அல்லது நீண்ட காலத்திற்கோ பயன்படுத்துவது சிறுநீரகச் செயல்பாட்டில் பெரும் அழுத்தத்தை உண்டாக்கி, இறுதியில் சிறுநீரகச் செயலிழப்பிற்கு (Kidney Failure) வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஏற்கனவே சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், சுய மருத்துவம் அவர்களின் உடல்நிலையை மேலும் சிக்கலாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், சிறுநீரகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க நாள்தோறும் போதிய அளவு தண்ணீர் அருந்துவது, மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவின்படி மட்டுமே மருந்துகளை உட்கொள்வது மற்றும் சுய மருத்துவத்தை தவிர்ப்பது மிக அவசியமாகும். வலி நிவாரணிகள் தற்காலிக நிவாரணத்தை தந்தாலும், வலியின் மூல காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. முந்தைய மருத்துவ சீட்டை வைத்து மீண்டும் மீண்டும் சுய சிகிச்சை செய்வதை விடுத்து, வருமுன் காப்பதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : தமிழ்நாட்டில் ஆன்லைனில் மது விற்பனையா? உண்மை என்ன? துறை அமைச்சரே கொடுத்த பரபரப்பு தகவல்..!!



