காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதிப்பதற்காக, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின்139-வது கூட்டம் நாளை காலை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55-வது அவசர கூட்டமும் நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிற்கான உரிய நீர்ப் பங்கீட்டின்படி, ஜூன், ஜூலை மற்றும் நடப்பு ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்குச் சேர்த்து மொத்தம் 88 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலவரப்படி வெறும் 10 டி.எம்.சி நீர் மட்டுமே காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு போதிய தண்ணீர் வழங்கப்படாத காரணத்தால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழக அதிகாரிகள், நிலுவையில் உள்ள தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் எனத் திட்டவட்டமாக வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு முறையாகத் தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு முறையிட்டார்.
தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவிரியில் நீர் திறக்கக் கோரும் தமிழக அரசின் மனு மற்றும் அது தொடர்பான பிற மனுக்கள் அனைத்தும் வரும் வியாழக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.


