சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தி, மக்களுக்கு எளிதில் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில், அம்மாநில அரசு ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ என்ற புதிய வசதியை ராய்ப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதைப் போல, ரேஷன் அட்டைதாரர்கள் இனி மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையின்றி, 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தானியங்களை இச்சேவை மூலம் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
சுமார் 2,500 கிலோ கொள்ளளவு கொண்ட இந்தத் தானியங்கி இயந்திரத்தில், தானியங்களை நிரப்புவதும் பயனாளிகளுக்கு விநியோகிப்பதும் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் பயோமெட்ரிக் (கைரேகை) சரிபார்ப்பு முறை மூலம் அடையாளத்தை உறுதி செய்து, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாதாந்திர ரேஷன் அரிசி மற்றும் சர்க்கரையைத் தங்களுக்கு வசதியான நேரத்தில் சிரமமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.
பொது விநியோக முறையை டிஜிட்டல் மயமாக்கி, அதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மக்களின் நேரம் வீணாவதைத் தவிர்க்கவும் உதவும் இந்த நவீன முயற்சி, ரேஷன் அட்டைதாரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


