காரில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் டிராலி பேக்கில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு தலைமறைவானதாகக் கூறப்படும் பெண்ணின் காதலனைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சோடிகுமாரிக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரிஷப்குமாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமாக மாறிய நிலையில், அது சோடிகுமாரியின் கணவர் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், எதிர்ப்பை மீறி சோடிகுமாரி ரிஷப்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருவரும் தாமன் பகுதிக்குச் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லாமல் அங்கேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட தகராறில் ரிஷப்குமார், சோடிகுமாரியை கொலை செய்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலைக்குப் பின்னர், சோடிகுமாரியின் உடலை மறைக்க டிராலி பேக் ஒன்றை வாங்கிய ரிஷப்குமார், அதற்குள் உடலை வைத்து ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சந்தேகத்துக்கிடமான நிலையில் தனியாக கிடந்த டிராலி பேக் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்று அதைத் திறந்து பார்த்துள்ளனர்.
அதில் சோடிகுமாரியின் உடல் இருப்பது தெரியவந்தது. உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள ரிஷப்குமாரை தேடி வருகின்றனர். சோடிகுமாரி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு எதனால் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய பிறகு மகளுக்கு எச்.ஐ.வி?… ஆட்சியரிடம் கண்ணீருடன் தந்தை புகார்!



