மரண ஓலத்தால் அலறும் கொலம்பியா!. மண்ணுக்குள் புதைந்த 3000 உயிர்கள்!. பலி எண்ணிக்கை 224 ஆக உயர்வு!.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திங்கள்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. கலி, பெரேரா, மனிசலெஸ், மற்றும் கிப்டோ ஆகிய மேற்கு கொலம்பிய நகரங்களிலேயே அதிகப்படியான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கொலம்பியாவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின் (USGS) தரவுகளின்படி, உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு சான் ஜோஸ் டெல் பால்மருக்கு கிழக்கே சுமார் மூன்று மைல் தொலைவில் 96 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. குறிப்பாக, காபி பயிரிடப்படும் முக்கியப் பகுதிகளில் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரேரா மற்றும் கலி நகரங்களில் பல மாடிக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. மனிசலெஸ் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தின் கோபுரம் சேதமடைந்தது. காவல்துறை, ராணுவம் மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு மீட்புப் படையினர் பெரிய இயந்திரங்கள் மூலமும், சில இடங்களில் வெறும் கைகளாலும் இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கலி நகரில் மட்டும் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டஜன் கணக்கான கட்டடங்கள் இடிந்தும், பல கட்டடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையிலும் உள்ளன. குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு உட்பட மருத்துவமனையின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததால் நோயாளிகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதனால் சுமார் 600 பேருக்கு திறந்தவெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரேரா நகரில் 66 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு குடியிருப்புப் பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நகர விமான நிலையம் பயங்கரமாக குலுங்குவதும், அதன் மேற்கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுவதும் போன்ற வீடியோ காட்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடான வெனிசுலாவிலும் உணரப்பட்டன. இதற்கு முன்னதாக 2026 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, வெனிசுலாவின் வடக்கு கடற்கரை பகுதியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இந்த பேரிடர், 1999 ஆம் ஆண்டு இதே பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பலிகொண்ட மோசமான நிலநடுக்கத்தின் கோர நினைவுகளை மீண்டும் கொலம்பிய மக்களின் கண்முன் நிறுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

நீங்கள் குடிக்கும் பாலில் சோப்பு, காஸ்டிக் சோடாவா?... வெளியான அதிர்ச்சி தகவல்!

Wed Aug 12 , 2026
இந்தியாவில் பாலில் கலப்படம் செய்வது நீண்ட காலமாகவே முக்கிய உணவுப் பாதுகாப்பு பிரச்னையாக இருந்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் சோதனைகளில், நுகர்வோரின் உடல்நலத்தையும், பால் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும் வகையில் பல்வேறு கலப்பட முறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செயற்கை மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பால் தயாரிக்கப்படுவதாக மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. FoodPharmer-க்கு அளித்த […]
Milk

You May Like