தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் பெற்றவர் மன்சூர் அலிகான். 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தனது பட வாய்ப்புகள் மற்றும் திரைத்துறையில் தனக்கு ஏற்பட்டதாகக் கருதும் புறக்கணிப்புகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ‘ஆல் பாஸ்’ திரைப்பட நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துகள் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான், சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா/கருப்பு’ திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார். அவர் பேசும்போது, அந்தப் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடனமாடியதாகவும், ரிங் மீது நின்று பாட்டில்களை வீசும் காட்சியில் நடித்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால் இறுதியாக தாம் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை என்றும், சூர்யாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், தனக்காக நடித்த 2 முதல் 4 நிமிட காட்சிகளையாவது வைத்திருக்கலாம் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், திரைத்துறையில் தனக்கு நீண்ட அனுபவம் இருப்பதாக குறிப்பிட்ட மன்சூர் அலிகான், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதாக தெரிவித்தார். தன்னுடைய நீண்டகால சினிமா பயணத்தை குறிப்பிட்ட அவர், தான் யாரிடமும் வாய்ப்புக்காக பிச்சை எடுக்கவில்லை என்றும், தன்னை ஏன் முக்கியத்துவமற்றவராக நடத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். தான் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறாதது குறித்து தனது மகன்கள் கேட்கும்போது அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றும் அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் உழைக்கும் எடிட்டர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் மன்சூர் அலிகான் விமர்சித்தார். திரைப்பட போஸ்டர்களில் ஹீரோக்களின் பெயர்கள் பெரிதாக இடம்பெறும் நிலையில், மற்ற கலைஞர்களின் பெயர்கள் மிகச்சிறிய எழுத்துகளில் ஓரமாக இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது மகன் செய்ததாகக் கூறப்படும் ஒரு சிறிய தவறை தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிலர் தன்னையும் தனது மகனையும் குறிவைத்து விமர்சித்து வருவதாகவும் மன்சூர் அலிகான் குற்றம்சாட்டினார். இதனால் ஏற்பட்ட தனது அதிருப்தியையும் அவர் நிகழ்ச்சியில் வெளிப்படையாக பதிவு செய்தார். திரைத்துறையில் பல ஆண்டுகளாக பயணித்து வரும் மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு, சினிமாவில் துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
Also Read: பாஜக கூட்டணியில் திமுக?… டெல்லியில் பரவும் பரபரப்பு தகவல்; கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவியா?



