முதியவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்..!! இலவச உடல்நலப் பரிசோதனைகள்..!! அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு..!!

Minister Arunraj 2026

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட முக்கிய திட்டங்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.


➣ தமிழகத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சைகள் பெறும் வகையில் “முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

➣ அனைத்து மாவட்ட அளவிலேயே உயற்சிறப்பு மருத்துவ சிகிச்சை வசதிகளைக் கொண்டு சேர்ப்பதற்காக 284 புதிய உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படும்.

➣ மருத்துவ பயனாளிகள் தங்களுக்குரிய நேரத்தில், தகுந்த மருத்துவ நிலையத்தில் எளிதாக சிகிச்சை பெற “சிகிச்சை ஒருங்கிணைப்பு திட்டம்” செயல்படுத்தப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

➣ தமிழக மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை உறுதி செய்யும் நோக்கில் “மாநில முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனங்கள் சட்டம்” இயற்றப்படும். இத்திட்டத்தை உருவாக்குவதற்காக முதற்கட்டமாக ரூ.16.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

➣ ஒப்பந்த செவிலியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக 2,500 கூடுதல் செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இவர்கள் தற்போதைய தொகுப்பூதிய முறையிலிருந்து மாற்றப்பட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

➣ 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுக்கு ஒருமுறை 14 அடிப்படைப் பரிசோதனைகள் அடங்கிய “நலம் – ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல்நலப் பரிசோதனை” திட்டம் ரூ.51 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

➣ செயற்கை கருத்தரிப்பு சேவையை விரிவாக்கும் வகையில் 31 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 6 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் “முதல் நிலை செயற்கை கருத்தரிப்பு மையங்கள்” நிறுவப்படும்.

➣ தமிழகத்தில் முதல்முறையாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையில் இந்திய மருத்துவ முறையை ஒருங்கிணைக்கும் வகையில், 30 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.1.03 கோடியில் “இந்திய மருத்துவ முறை கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள்” அமைக்கப்படும்.

➣ 18 மாவட்டங்களிலுள்ள 29 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.82.50 கோடி செலவில் “நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்களாக” தரம் உயர்த்தப்படும். இங்குத் தேவைக்கேற்ப காலை 9:00 முதல் 1:00 மணி வரையிலும், மாலை 4:30 முதல் 8:30 மணி வரையிலும் சிறப்பு மருத்துவச் சேவைகள் வழங்கப்படும்.

➣ சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை சேவை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். முதற்கட்டமாக மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் நாமக்கல் ஆகிய 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இச்சேவை தொடங்கப்படும்.

➣ தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநகரப் பகுதிகளில், முன்பதிவு அடிப்படையில் மருத்துவப் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று இரத்த மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனை செய்யும் சேவைகள் பொது-தனியார் கூட்டு முறையில் (PPP) செயல்படுத்தப்படும்.

➣ அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு இரத்த சோகையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.6.37 கோடியில் “இரும்பு கண்மணி திட்டம்” செயல்படுத்தப்படும்.

➣ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு, 7 அரிய வகை மரபுசார் நோய்களைக் கண்டறியும் சேவைகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ‘Hub-and-Spoke’ முறையில் செயல்படுத்தப்படும்.

➣ மிகக் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உயர்தர தீவிர சிகிச்சை வழங்கும் நோக்கில், சென்னை மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவமனை (IOG), மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.16.81 கோடியில் “நியோ-ஜெனீசிஸ்” தீவிர சிகிச்சைப் பிரிவு நிறுவப்படும்.

➣ தமிழகத்தில் முதன்முறையாக, அரசு மருத்துவமனைகளில் Type-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இலவசமாக இன்சுலின் மருந்துகள் வழங்குவதற்காக ரூ.9.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

➣ 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளில் புதிய தாய்-சேய் நலக் கட்டடங்கள் கட்ட ரூ.128 கோடியும், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் அமைக்க ரூ.12 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

➣ கடலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 10 அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு, உள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுகள் உள்ளிட்ட கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.98.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

➣ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய உயர் அடுக்கு “ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம்” அமைக்க ரூ.95.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

➣ மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயிர் காக்கும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்க ரூ.66.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

➣ கிராமப்புறங்களில் மருத்துவச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் புதிய கூடுதல் கட்டடங்கள் அமைக்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More : உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக் கொடுங்க..!! அமைச்சர் ரமேஷ் காட்டம்..!! மன்னிப்புக் கேட்ட முதல்வர் விஜய்..!!

Next Post

மக்களை தூங்கவிடாத டவுசர் கேங்..!! நள்ளிரவில் திக் திக்..!! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Mon Aug 17 , 2026
ஓசூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் உள்ளாடை மற்றும் முகமூடி அணிந்த மர்ம கும்பல் உலா வந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் நகர் குடியிருப்புப் பகுதியில் 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 2.48 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்துள்ளனர். வெறும் உள்ளாடை மற்றும் முகமூடி மட்டுமே அணிந்திருந்த அந்தக் கும்பல், தெருக்களிலும் வீடுகளின் முன்புறமும் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்து ஒவ்வொரு […]
Hosur 2026

You May Like