சுதந்திர தினத்துக்கு முன்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஷெசாத் பட்டி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை தொடர்புகொண்டு, அவர்களை தனது குழுவில் இணைத்து வந்துள்ளார்.
வெளிநாடுகளில் வசித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தன்னை பிரபலமாக முன்னிறுத்தி இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த ஷெசாத் பட்டி குழு திட்டமிட்ட தகவல் உளவுத்துறைக்கு கிடைத்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய அறிக்கை அளிக்கப்பட்டு, அந்த குழுவினரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து பல்வேறு இடங்களில் ரகசியமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 12-ம் தேதி 14 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில வாரியாக பார்க்கும்போது உத்தரப் பிரதேசத்தில் 62 பேரும், ஹரியாணாவில் 52 பேரும், டெல்லியில் 51 பேரும், பஞ்சாபில் 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 15 பேர், மகாராஷ்டிராவில் 8 பேர், உத்தராகண்டில் 5 பேர் பிடிபட்டுள்ளனர். கர்நாடகா, குஜராத் மற்றும் பிஹாரில் தலா 3 பேரும், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்ட ஷெசாத் பட்டி குழுவின் தீவிரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை மூலம் சுதந்திர தினத்துக்கு முன்பாக மிகப்பெரிய தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களுக்கு இடையேயான தொடர்பு, அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி, ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன மற்றும் இந்த வலையமைப்பில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read: தொடர்ந்து கடும் தீர்ப்புகள்.. 4 மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி!



