முதல் திருமணத்தை சட்டப்படி முடிக்காமல் மற்றொரு திருமணம் செய்வதால், பல குடும்பங்களில் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அசாம் அரசு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அசாம் அரசு பணியில் இருக்கும் ஒருவர், தனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அவரது சம்பளத்தில் இருந்து 20 சதவீத தொகையை பிடித்தம் செய்து முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர், முதல் திருமணம் சட்டப்படி தொடரும் நிலையில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என எச்சரித்தார். உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதன்படி, முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மற்றொரு திருமணம் செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் மாத சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
அந்த தொகை முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்படும். பல நேரங்களில் கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகு, முதல் மனைவிக்கு குடும்பச் செலவுகள், குழந்தைகளின் பராமரிப்பு உள்ளிட்ட பொறுப்புகள் தனியாக சுமையாகிவிடுகின்றன. இதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் திருமணம் தொடர்பான சட்ட நிலையை முடித்த பிறகே அடுத்த திருமணம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதையும் அசாம் அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் வலியுறுத்தியுள்ளது.
முறையான விவாகரத்து நடைமுறைகளை பின்பற்றாமல் இரண்டாவது திருமணம் செய்வதை அரசு சகித்துக்கொள்ளாது என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
Also Read: நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட கும்பல்.. 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அதிரடி கைது!



